பெர்லின்: உலகளவில் ஒரு லட்சம் பணியிடங்களை குறைப்பதுடன், ஜெர்மனியில் நான்கு தொழிற்சாலைகளை மூடும் வகையில் போக்ஸ்வாகன் பெரிய அளவிலான மறுசீரமைப்பை திட்டமிட்டு இருப்பதாக ஜெர்மன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
1937-ல் தொடங்கப்பட்ட இந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனம் பல நாடுகளில் தொழிற்சாலைகள் கொண்டுள்ளது. மின்னணு வாகனங்களுக்கான தேவை அதிகரிப்பு, அமெரிக்காவின் வரிவிதிப்பு தாக்கம், சீன நிறுவனங்களின் போட்டி ஆகியவை இந்த மாற்றத் திட்டத்திற்கு காரணங்களாக கூறப்படுகின்றன.
மேலும் அடுத்த ஐந்தாண்டுகளில் முதலீட்டை 15% குறைத்து, 1,40,464 கோடியாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வாகன உதிரிபாகங்கள் மற்றும் பயணிகள் கார் விற்பனை பிரிவுகளை தனித்தனியாகப் பிரிக்கும் திட்டமும் இருக்கலாம் என ஊடகங்கள் கூறுகின்றன.
சீன சந்தையில் 2024 முதல் பிஓய்டி நிறுவனத்தின் வாகனங்கள் அதிகமாக விற்பனையாகத் தொடங்கியதாகவும், 2025-ல் சீனாவில் விற்பனையில் போக்ஸ்வாகன் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டதாகவும் அந்த செய்தி குறிப்பிடுகிறது. ஐரோப்பிய சந்தையிலும் சீன நிறுவனங்களின் விற்பனை உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கைகள் குறித்து போக்ஸ்வாகன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. இதற்கிடையில், தொழிற்சாலைகள் மூடல் மற்றும் பணியிடக் குறைப்பு முடிவுகளுக்கு எதிராக முழு அளவில் போராடுவோம் என ஜெர்மனி தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.





