நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு பிப்ரவரியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. பா.ஜ., காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. 2024 லோக்சபா தேர்தலில் உ.பி.யில் பா.ஜ. கூட்டணிக்கு எதிர்பார்த்த அளவிலான வெற்றி கிடைக்காத பின்னணியில், இந்த முறை வெற்றி கட்டாயமாகியுள்ளது.

இந்த சூழலில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் இடையே இருந்ததாக கூறப்பட்ட உறவு கசப்பு தற்போது குறைந்துள்ளதாக மாநில பா.ஜ. தலைவர்கள் தெரிவிக்கின்றனர். முரண்பாடு நீடித்தால் தேர்தலில் பாதிப்பு ஏற்படும் என்பதை இருவரும் உணர்ந்து மீண்டும் நெருக்கமாகியுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

தேசிய தலைவராக நிதின் நபின் பொறுப்பேற்றதற்கு பிறகு, சமீபத்தில் உ.பி. பா.ஜ. அமைப்பு மறுசீரமைக்கப்பட்டது. இதில் யோகிக்கும் அமித் ஷாவுக்கும் நெருக்கமானவர்களுக்கு கட்சியில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், வட மாநில தேர்தல்களில் முக்கியமாகக் கருதப்படும் ஜாதி சமநிலையை கருத்தில் கொண்டு, ராஜ்புத், ஷாக்யா, பிராமணர், பாசி உள்ளிட்ட எட்டு சமூகங்களைச் சேர்ந்தவர்களை பொதுச்செயலர்களாக பா.ஜ. நியமித்துள்ளது. இதற்கிடையே, அயோத்தி நன்கொடை தொடர்பான விவகாரம் கட்சியின் வெற்றியை பாதிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.