சென்னை: வரவிருக்கும் சட்டசபை இடைத்தேர்தலில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியில் போட்டியிடுவது குறித்து, ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க.வில் இருந்து வெளியேறிய அண்ணாமலை, ‘வீ தி லீடர்ஸ்’ என்ற அமைப்பை தொடங்கினார். அதில் 18 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த கட்டமாக தனிக்கட்சி தொடங்கி வலுவான அரசியல் சக்தியாக மாறும் இலக்குடன் அவர் நகர்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்.
இதற்கிடையில் திருச்சி கிழக்கு, பெருந்துறை, தாராபுரம், விராலிமலை, அம்பாசமுத்திரம், மதுராந்தகம் ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என கூறப்படுகிறது. திருச்சி கிழக்கில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என கட்சியினர் வலியுறுத்துவதாகவும், அம்பாசமுத்திரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சூழலில், கொங்கு மண்டலத்தை மையமாக வைத்து அரசியல் செய்யும் அண்ணாமலை, பெருந்துறையில் போட்டியிட்டு தனது பலத்தை காட்ட வேண்டும் என ஆதரவாளர்கள் வலியுறுத்துவதாக கூறப்படுகிறது. பெருந்துறையில் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு எவ்வாறு இருக்கும், குறைந்தபட்சம் 50 ஆயிரம் வாக்குகள் பெற முடியுமா, மேலும் முந்தைய இடைத்தேர்தல்களைப் போல பணபலம் மற்றும் அதிகாரப் பலம் பயன்படுத்தப்படுமா போன்ற பல கோணங்களில் அவர் ஆலோசித்து வருவதாக ஆதரவாளர் ஒருவர் தெரிவித்தார். விரைவில் முடிவு எடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.





