பா.ஜ.க. வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட அயோத்தி ராமர் கோவில் விவகாரம், தற்போது அதே கோவிலின் நன்கொடை முறைகேடு குற்றச்சாட்டுகளால் கட்சிக்கு பெரும் சிக்கலாக மாறியுள்ளது.
இந்த விவகாரம் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியதாகவும், பா.ஜ.க. தலைவர்கள் அல்லது ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் என யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என அவர் உத்தரவிட்டதாகவும், பா.ஜ.க. தரப்பில் கூறப்படுவதாக செய்தி தெரிவிக்கிறது.
விவகாரத்தை விசாரிக்க உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மூன்று பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளார். அந்த குழு சமீபத்தில் எட்டு பேரை கைது செய்துள்ளது. இதனிடையே, ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச்செயலர் சம்பத் ராய் மற்றும் அறங்காவலர் அனில் மிஸ்ரா ஆகியோர் தார்மிக காரணங்களை முன்வைத்து பதவியிலிருந்து விலகியதாக கூறப்படுகிறது.
கைதானவர்களில் முக்கியமானவர் ராமசங்கர் என்கிற ‘டின்னு யாதவ்’ என செய்தி குறிப்பிடுகிறது. இவர் சம்பத் ராயின் டிரைவர் என்றும், நன்கொடை பெட்டிகளின் சாவிகள் உள்ளிட்ட பொறுப்புகள் இவரிடம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. கோவிலில் பணியாளர்களை நியமிப்பது, பணம் எண்ணும் பணியை ஒதுக்குவது போன்றவற்றிலும் இவர் முக்கிய பங்கு வகித்ததாகவும், அயோத்தி மற்றும் லக்னோவில் 50 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள சொத்துகள், ஆடம்பர குடியிருப்பு, பல விலையுயர்ந்த கார்கள் உள்ளதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
முதல் தகவலறிக்கையில் பெயரிடப்பட்ட மனிஷ் யாதவ், டின்னு யாதவின் மருமகன் எனவும், அவரை நன்கொடை எண்ணும் குழுவில் நியமித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், திருட்டு குறித்த புகார்களை சம்பத் ராய் கவனிக்கவில்லை; குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் அவரை விசாரிக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். தரப்பில் கூறப்படுவதாக செய்தி தெரிவிக்கிறது. இந்த நன்கொடை முறைகேடு விவகாரம் ஆளும் பா.ஜ.க. அரசுக்கு புதிய சிக்கலை உருவாக்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.





