புதுடில்லி: இஸ்ரேல்–காசா போர் தொடர்பாக மத்திய அரசின் வெளியுறவு கொள்கையை விமர்சித்து காங்கிரஸ் பார்லிமென்டரி கட்சி தலைவர் சோனியா காந்தி கட்டுரை எழுதியதைத் தொடர்ந்து, பா.ஜ. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தனியார் ஆங்கில நாளிதழில் வெளியான அந்தக் கட்டுரையில், பாலஸ்தீனர்களின் குழந்தைகளை குறிவைத்து இஸ்ரேல் செயல்படுகிறது என்றும், இது “காட்டு மிராண்டித்தனம்” என்றும் சோனியா குறிப்பிட்டார். மேலும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்து மவுனம் காப்பது தார்மிக ரீதியாக கண்டிக்கத்தக்கது; தேசிய நலன் என்ற கோணத்தில் விளக்க முடியாதது என்றும் அவர் எழுதியிருந்தார்.
மேலும், பாலஸ்தீனம், ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு பிராந்திய நட்பு நாடுகளிடமிருந்து இந்தியா விலகிச் சென்றதாகவும், இதனால் இந்தியா பெற்றிருந்த ராஜதந்திர தொடர்புகளை பாகிஸ்தான் ஆக்கிரமித்து விட்டதாகவும் அவர் விமர்சித்தார்.
இதற்கு பதிலளித்த பா.ஜ. தேசிய செய்தித் தொடர்பாளர் செஷாத் பூனாவாலா, காசா குறித்து கடுமையாக பேசும் காங்கிரஸ், வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது நடக்கும் வன்முறைகள் குறித்து ஏன் மவுனம் காக்கிறது என்று கேள்வி எழுப்பினார். வெளியுறவு கொள்கையிலும் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது; வெளிநாட்டு கொள்கையையே ஓட்டு வங்கி அரசியலின் அடிப்படையில் தீர்மானிக்க முயல்கிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
காசா விவகாரத்தில் இந்தியா நிலையான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகவும், ஐ.நா. சபையில் ஓட்டளித்ததுடன் மனிதாபிமான உதவிகளையும் வழங்கியுள்ளதாகவும் பூனாவாலா கூறினார். உலகளாவிய மோதல்களில் அனைத்து தரப்பினருடனும் பேச்சு நடத்தும் வகையில் இந்தியாவின் வெளியுறவு கொள்கை அமைந்துள்ளதாகவும், பாலஸ்தீனம்–இஸ்ரேல் இரு தரப்பிலும் பேசக்கூடிய நிலையில் இந்தியா இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.





