மண் வளத்தை பாதுகாத்ததற்காக ஐ.நா. உணவு மற்றும் வேளாண் பிரிவின் அங்கீகாரம் பெற்ற கோவை இயற்கை விவசாயி வள்ளுவன், மரம் சார்ந்த விவசாயம் இன்றைய காலத்தின் கட்டாயம் என தெரிவித்துள்ளார். தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் ஆண்டு முழுவதும் விவசாயம் செய்ய ஏற்ற சூரிய ஒளி, அளவான மழை மற்றும் ஆரோக்கியமான மண் போன்ற இயற்கை ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர் கூறினார்.
கோவை வடவள்ளியை சேர்ந்த வள்ளுவன், பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பண்ணை நடத்தி வருகிறார். அவரது பண்ணையில் 2007-ல் 0.5% இருந்த மண்ணின் அங்கக கரிமச் சத்து தற்போது 3.36% ஆக உயர்ந்துள்ளதாகவும், இயற்கை முறைகளால் மண் உயிரியல் மேம்பட்டதாகவும் அவர் விளக்கினார்.
2006-ல் தென்னை சாகுபடியை தொடங்கியபோது ஒரே பயிர் முறையில் லாபம் கிடைக்கவில்லை என அவர் கூறினார். ஒரு மரத்துக்கு சராசரியாக 110 தேங்காய் கிடைத்தாலும், ஒரு மரத்திற்கு ரூ.500-க்கும் மேல் செலவாகி, தேங்காய் ஒன்றுக்கு ரூ.3 என்ற விலையில் விற்றால் வருமானம் போதவில்லை. இதிலிருந்து வெளியேற நம்மாழ்வார் எழுத்துகளை வாசித்ததாகவும், பின்னர் ஈஷா யோகா மைய தன்னார்வலர்களுடன் ஏற்பட்ட உரையாடல்களின் மூலம் பாரம்பரிய பல பயிர்–பல அடுக்கு சாகுபடி முறையை ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
மரம் சார்ந்த பல அடுக்கு முறையில் பழங்கள், காய்கறிகள், கீரைகள் உள்ளிட்ட ஊடுபயிர்களை இணைத்ததுடன், மர இலைத் தழைகளை மூடாக்காக பயன்படுத்தியதாக கூறினார். மேலும் நாட்டு மாடுகளின் சாணம், மூத்திரத்தை கரைத்து வடிகட்டி சொட்டு நீர் பாசனம் வழியாக பாய்ச்சியதால் மண் வளம் பெருகி விளைச்சல் உயர்ந்ததாகவும் தெரிவித்தார். ஏக்கருக்கு ரூ.30,000 கிடைப்பதே பெரிய விஷயமாக இருந்த நிலையில், தற்போது அது 10 மடங்கு உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், தனது பண்ணையில் 9,000-க்கும் மேற்பட்ட தடி மரங்களும் 2,000-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் உள்ளதாகவும், அதிக மரங்கள் இருப்பதால் பண்ணையின் வெப்பநிலை சுமார் 3°C குறைவாக இருப்பதாகவும் தெரிவித்தார். இதனால் மிளகு, காபி, ஆப்பிள், ஜாதிக்காய் போன்ற பயிர்களையும் வளர்க்க முடிந்ததாகவும், வறட்சிக் காலங்களில் பாதிப்பு குறைந்ததாகவும், வெள்ளை ஈ தாக்குதல் தாழ்ந்ததாகவும் கூறினார். கார்பன் உமிழ்வு அதிகரித்து காற்றின் தரம் பாதிப்பதால் அமில மழை போன்ற பிரச்னைகள் உருவாகின்றன; இதை சமாளிக்க மரங்கள் மூலம் ஆக்ஸிஜன் அதிகரிக்க வேண்டும் என்பதால் மரம் சார்ந்த விவசாயம் அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.





