புதுடில்லி: ஆப்பரேஷன் சிந்தூர் விவகாரத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை குறிவைத்து எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு அவதூறு பரப்புவதாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது.
ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது உயிரிழந்த 6 ராணுவ வீரர்களின் பெயர்களை மத்திய அரசு முதல்முறையாக வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த சர்ச்சை எழுந்தது. கடந்தாண்டு பார்லிமென்டில் ஆப்பரேஷன் சிந்தூர் குறித்து ராஜ்நாத் சிங் பேசியபோது உயிரிழப்புகள் தொடர்பான தகவலை ஏன் கூறவில்லை என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.
மேலும், மத்திய அரசு நாட்டைத் தவறாக வழிநடத்தி வீரர்களின் தியாகத்தை மறைத்ததாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
இதற்கு பதிலளித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், 2025 ஜூலை 28 அன்று அமைச்சர் ஆற்றிய உரையின் ஒரு பகுதியை மட்டும் சமூக வலைதளங்களில் பரப்பி அவரது பேச்சை தவறாக சித்தரிக்க முயல்கிறார்கள் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. ஆப்பரேஷன் சிந்தூரின் போது எந்த வீரரும் உயிரிழக்கவில்லை என்று அமைச்சர் கூறியதாக காட்டுவது முற்றிலும் தவறானதும் உண்மைக்குப் புறம்பானதும் எனவும் கூறியுள்ளது.
அந்த உரையில், நடவடிக்கையின் போது இந்திய விமானிகள் உயிரிழந்ததாக வெளியான வதந்திக்கு மட்டுமே அமைச்சர் பதிலளித்ததாகவும், முழு பின்னணியை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் இந்த சர்ச்சையை உருவாக்கியதாகவும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.





