தனியார் பள்ளிகளுக்கான அனுமதிகள் தொடர்பான மோசடி புகாரில், திமுக செய்தித் தொடர்புக் குழு துணைத் தலைவராக குறிப்பிடப்படும் அரசகுமார் (59) என்பவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு (சிசிபி) போலீசார் கைது செய்துள்ளனர்.
புகாரின் படி, சாலிகிராமத்தில் “தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்” என்ற பெயரில் பதிவு செய்யப்படாத அமைப்பை நடத்தி வந்த அரசகுமார், அரசியல் தொடர்புகளை காட்டி தடையின்மை சான்று, நிரந்தர அங்கீகாரம் மற்றும் நர்சரி/பிரைமரி பள்ளிகளை நடுநிலை பள்ளிகளாக தரம் உயர்த்தும் அனுமதிகளை பெற்றுத் தருவதாக உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இதற்காக பள்ளி நிர்வாகிகளிடம் பணம் கேட்டு வசூலித்ததாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் பல பள்ளி நிர்வாகிகளிடமிருந்து ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்தும், வாக்குறுதியளித்த அங்கீகாரங்களை பெற்றுத் தராமல் ஏமாற்றியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி கட்டட மதிப்பை அடிப்படையாகக் கொண்டு சதுர அடிக்கு கணக்கிட்டு தொகை வசூலித்ததாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலர் இளங்கோவன் அளித்த புகாரின் அடிப்படையில் சிசிபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மோசடி நடந்ததற்கான தகவல்கள் உறுதியானதாகக் கூறி, சாலிகிராமம் மெஜஸ்டிக் காலனியில் வசித்து வந்த அரசகுமாரை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கின் விசாரணை விரிவடையக்கூடும் என்றும், முன்னாள் எம்.எல்.ஏ. உள்ளிட்ட மேலும் சில முக்கிய நபர்கள் சிக்க வாய்ப்புள்ளதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.





