புதுடில்லி: பா.ஜ.வை சேர்ந்த அஜ்மீர் எம்.பியும், மத்திய வேளாண் இணை அமைச்சருமான பாகீரத் சவுத்ரி, தன் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் திட்டத்தின் மூலம் தனது சொந்த பண்ணைக்காக ரூ.99 லட்சம் அரசு மானியம் பெற்றதாக வெளியான தகவலால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இந்த மானியம், 2014-15ல் தொடங்கப்பட்ட ‘தோட்டக்கலை ஒருங்கிணைந்த மேம்பாட்டு இயக்கம்’ (Mission for Integrated Development of Horticulture) திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பூக்களை வணிக ரீதியில் பெரிய அளவில் சாகுபடி செய்ய ஊக்குவிக்கும் இந்தத் திட்டத்தை, மத்திய வேளாண் அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள தன்னாட்சி அமைப்பான தேசிய தோட்டக்கலை வாரியம் செயல்படுத்துகிறது.
வெளியான விவரங்களின்படி, ராஜஸ்தானின் டீத்வானா-குச்சாமன் மாவட்டம் பீஹ் கிராமத்தில் உள்ள அவரது பண்ணையில் சுமார் 1.78 லட்சம் சதுரடி பரப்பளவில் வெள்ளரி சாகுபடிக்காக இந்த மானியம் பெறப்பட்டுள்ளது. திட்டத்தின் மொத்த செலவு ரூ.1.99 கோடி என்றும், இதில் அவரது பங்கு ரூ.49.80 லட்சம் என்றும், தனியார் வங்கியான எச்.டி.எப்.சி.யில் ரூ.1.49 கோடி கடன் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஏப்.15ல் விண்ணப்பம் அளிக்கப்பட்டு, ஏப்.29க்குள் கொள்கையளவில் ஒப்புதல் கிடைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. இறுதி ஒப்புதல் மார்ச் 11ல் வழங்கப்பட்டு, மார்ச் 30ல் மானியத் தொகை அவரது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தேசிய தோட்டக்கலை வாரியத்தின் இயக்குநர்கள் குழுவில் மத்திய வேளாண் அமைச்சர் தலைவர்; வேளாண் இணை அமைச்சர் துணைத் தலைவர் என அமைப்பு உள்ளது. இதனால் விவகாரம் மேலும் கவனம் பெற்றுள்ளது. இருப்பினும், மானியம் வழங்கும் செயல்முறையில் அமைச்சருக்கு நேரடி பங்கு இல்லை என கூறப்படுகின்றது. இதற்கு பதிலளித்த சவுத்ரி, விதிகளின்படியே மானியம் வழங்கப்பட்டதாகவும், தானும் ஒரு விவசாயியாக மற்றவர்களைப் போல விண்ணப்பித்ததாகவும் தெரிவித்தார்.





