சீசெல்ஸ் பார்லியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். இதன் மூலம், சீசெல்ஸ் பார்லியில் உரை நிகழ்த்திய முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை அவர் பெற்றார். இந்தியப் பெருங்கடல் இந்தியாவையும் சீசெல்ஸையும் பிரிக்கவில்லை; மாறாக இணைக்கிறது என்றும் அவர் கூறினார்.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள தீவு நாடான சீசெல்ஸுக்கு பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக சென்றுள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் அவர், நாளை நடைபெறும் அந்த நாட்டின் தேசிய தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார்.

இந்தப் பயணத்தின் போது, சீசெல்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான “கார்டியன் ஆப் தி ப்ளூ ஹொரைசன்” விருது அவருக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும், இது பிரதமர் மோடியின் 20வது வெளிநாட்டு பார்லி உரை என்றும் குறிப்பிடப்பட்டது.

பார்லியில் உரையாற்றும் வாய்ப்பை தனிச்சிறப்பான கவுரவமாகக் கருதுவதாக மோடி தெரிவித்தார். 2015ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பின், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் முதன்முதலில் அவர் சென்ற நாடு சீசெல்ஸ் எனவும் நினைவூட்டினார்.

இருநாடுகளின் நட்பு ராஜதந்திர உறவுகளால் மட்டும் தொடங்கியதல்ல; 1770ஆம் ஆண்டிலிருந்தே தொடர்புகள் உள்ளன என்றும், அரசுகள் மட்டுமல்ல மக்கள் கட்டியெழுப்பிய உறவாக இது வளர்ந்துள்ளது என்றும் அவர் கூறினார். பார்லிக்கு வந்தபோது, அங்கிருந்த பிரதிநிதிகள் அனைவரும் எழுந்து நின்று அவரை வரவேற்றனர்.