மியான்மரில் சட்டவிரோத அபின் உற்பத்தி கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு போதைப்பொருள் கடத்தல் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு எச்சரித்துள்ளது.

டில்லியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு ஒருங்கிணைப்பு மையத்தின் (Narco-Coordination Centre) 10வது உயர்மட்ட கூட்டத்தில், போதைப்பொருள் தடுப்புக்கான தொலைநோக்கு ஆவணமும், அமைப்பின் ஆண்டு அறிக்கையும் வெளியிடப்பட்டன. இதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டார்.

அறிக்கையின் படி, 2022ல் தலிபான்கள் விதித்த தடை காரணமாக ஆப்கானிஸ்தானில் அபின் சாகுபடி பெரும் சரிவை சந்தித்தது. ஆனால் மியான்மரில் அபின் உற்பத்தி 50%க்கும் மேல் விரிவடைந்துள்ளதாகவும், சமீப ஆய்வுகள் மூலம் அந்த நாடு உலகின் மிகப்பெரிய அபின் உற்பத்தி நாடாக மாறியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 1,643 கி.மீ. நீளமுள்ள இந்தியா–மியான்மர் சர்வதேச எல்லை மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, அருணாச்சலப் பிரதேசம் வழியாக எளிதில் ஊடுருவக்கூடிய நிலப்பரப்பைக் கொண்டதால் கடத்தல் அபாயம் அதிகரிப்பதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. ஆய்வகங்களில் தயாரிக்கப்படும் மெத்ஆம்பெட்டமைன், நைட்சீன்ஸ் போன்ற செயற்கை போதைப்பொருட்களின் சர்வதேச புழக்கமும் உயர்ந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

பஞ்சாப் போன்ற மாநிலங்களில் ஹெராயினுக்கு அடுத்தபடியாக, கோடீன் கலந்த இருமல் மருந்துகள் மற்றும் போதை மாத்திரைகள் சட்டவிரோதமாக பரவுவது “இரண்டாவது அலை” போல உருவெடுத்துள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது. கடத்தல்காரர்கள் ட்ரோன்கள், டார்க்நெட் தளங்கள், சிக்னல்/டெலிகிராம் போன்ற குறியாக்க செயலிகள், கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகள் ஆகியவற்றை அதிகம் பயன்படுத்துவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை எதிர்கொள்ள போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரவும், எல்லைப் பகுதிகளில் ஏ.ஐ. தொழில்நுட்பம் மற்றும் ட்ரோன் தடுப்பு சாதனங்கள் மூலம் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது.