முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்குப் பிறகு, மக்களின் மனநாடியை அறிந்த பிரதமராக நரேந்திர மோடியை முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனது டைரியில் குறிப்பிட்டுள்ளார் என்று அவரது மகள் சர்மிஸ்தா முகர்ஜி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், காஷ்மீரில் பெருவெள்ளம் ஏற்பட்ட பின்னர் அந்த ஆண்டில் பிரதமர் மோடி அங்கு தீபாவளியை கொண்டாடியதை தனது தந்தை எடுத்துக்காட்டியதாக தெரிவித்தார். மேலும், மோடி முதலில் சியாச்சினிலும், அடுத்த ஆண்டு காஷ்மீரிலும் தீபாவளியை கொண்டாடியதாகவும் அவர் கூறினார்.

நாட்டின் வெளியுறவுக் கொள்கையை பிரதமர் மோடி விரைவாக புரிந்து கொண்டார் என்று பிரணாப் முகர்ஜி பாராட்டியதாகவும் சர்மிஸ்தா தெரிவித்தார். ஜனநாயகத்தின் பலம் உரையாடலில்தான் உள்ளது என்பது அவரது நிலைப்பாடு என்றும், தாம் காங்கிரஸ் கட்சியில் முழுமையாக ஈடுபட்டிருந்த நிலையிலும் தந்தை ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்றது குறித்து தமக்கு வருத்தம் இருந்ததாகவும் அவர் நினைவுகூரினார்.

அந்தச் சந்திப்பை ஆர்எஸ்எஸ்-க்கு அங்கீகாரம் அளிப்பதாக சிலர் விவாதித்தபோது, தாம் அதையே தந்தையிடம் கூறியதாகவும், அதற்கு பிரணாப் முகர்ஜி கோபத்துடன் “ஆர்எஸ்எஸ்-க்கு அங்கீகாரம் அளிக்க நான் யார்? நாட்டின் மக்கள், இந்தியாவின் மக்கள்தான்” என்று பதிலளித்ததாகவும் அவர் கூறினார். மேலும், தந்தைக்கும் மோடிக்கும் ஜனாதிபதி–பிரதமர் என்ற பதவிநிலையைத் தாண்டிய நல்லுறவு இருந்ததாகவும், மோடி குஜராத் முதல்வராகும் முன்பே இருவருக்கும் பழக்கம் இருந்ததாகவும், டெல்லிக்கு ஆர்எஸ்எஸ் தொண்டராக வந்த காலங்களில் காலை நடைபயிற்சியில் அவர்கள் சந்தித்துக் கொள்வதுண்டு என்றும் அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான பிரணாப் முகர்ஜி 2012 முதல் 2017 வரை இந்திய ஜனாதிபதியாக பணியாற்றினார். 2014-ல் மோடி பிரதமராக பதவியேற்றபோது அவருக்கு பிரணாப் முகர்ஜியே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.