புதுடில்லி: இலங்கையில் இந்தியா–பாகிஸ்தான் இடையே ‘டிராக் 2’ எனப்படும் அதிகாரப்பூர்வமற்ற பேச்சு நடந்ததாக வெளியான தகவல்களை பா.ஜ. மூத்த தலைவர் மற்றும் இந்தியா பவுண்டேஷன் தலைவர் ராம் மாதவ் மறுத்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியை ‘டிராக் 2’ பேச்சாகக் குறிப்பிட்டு வெளியான செய்திகளில், இந்தியா தரப்பில் ராம் மாதவ், முன்னாள் ராணுவத் தளபதி எம்.எம். நரவனே, முன்னாள் தூதர் ருச்சி கன்ஷ்யாம் உள்ளிட்டோர், பாகிஸ்தான் தரப்பில் முன்னாள் தூதர் சஜ்ஜாத் ஹைதர் கான், முன்னாள் அமைச்சர் ஷெரி ரஹ்மான், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி இஸ்பந்தியார் அலி கான் படவுடி உள்ளிட்டோர் பங்கேற்றதாகவும் கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து நேற்று விளக்கம் அளித்த ராம் மாதவ், அந்த நிகழ்ச்சி இந்தியா–பாக். ‘டிராக் 2’ பேச்சு அல்ல என்றும், பிரிட்டனைச் சேர்ந்த சர்வதேச உத்திசார் ஆய்வு நிறுவனம் (IISS) நடத்தும் வருடாந்திர தெற்காசிய உரையாடல் மாநாடு என்றும் தெரிவித்தார். இதில் இந்தியா, இலங்கை, அமெரிக்கா, பிரிட்டன், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் பங்கேற்றதாகவும் கூறினார்.

பல நாடுகள் பங்கேற்கும் மாநாட்டை இரு நாடுகளுக்கிடையேயான பேச்சாகச் சித்தரிப்பது தவறு என்றும், தேவையற்ற விவகாரத்துக்காக “புனையப்பட்ட” செய்தி எனவும் அவர் விமர்சித்தார். மேலும், இரு நாட்கள் நடந்த மாநாட்டில் முழுமையாக பங்கேற்கவில்லை; ஒரு அமர்வில் உரையாற்ற அழைக்கப்பட்டேன், உரை முடிந்ததும் வெளியேறினேன் என்றும் அவர் கூறினார்.