உத்தரகண்டில் 70 ஆண்டுகளாக நீடித்த நிலத் தகராறு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கி, நான்கு தலைமுறைகளாக நீண்ட சட்டப் போராட்டத்திற்கு முடிவுகட்டியுள்ளது. இந்த வழக்கு ஹரித்வார் மாவட்டம் நர்சிபூர் கலான் கிராமத்தில் உள்ள 3.1 ஏக்கர் நிலத்தைச் சுற்றி நடந்தது.
வழக்கு விவரங்களின்படி, மனுதாரர் சராபத் அலியின் முன்னோர்கள் 1957ல் பதிவு செய்யப்பட்ட கிரையப் பத்திரத்தின் மூலம் நிலத்தை வாங்கினர்; அதன்பின் அந்த நிலம் குடும்பத்தின் கட்டுப்பாட்டிலேயே இருந்ததாக கூறப்படுகிறது. 1984ல் பட்டா மாற்றத்திற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோது விற்பனையாளர்களில் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தாலும், அதை 1991ல் திரும்ப பெற்றதால் மனுதாரர்களுக்கு சாதகமாக பட்டா மாற்றம் நடந்தது.
1991ல் நடந்த நில ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளிலும் 3.1 ஏக்கர் நிலத்தின் மீதான குடும்ப உரிமை அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் பின்னர் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, 1999ல் விவகாரத்தை ஆய்வு செய்த நில ஒருங்கிணைப்பு அதிகாரி 1957 கிரையப் பத்திரத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கி, உத்தர பிரதேச ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டத்தின் கீழ் அது செல்லாது எனக் கூறி உரிமையை ரத்து செய்தார்.
இதனைத் தொடர்ந்து மேல்முறையீட்டு ஆணையங்களும், 2017ல் உயர் நீதிமன்றமும் ரத்து உத்தரவை சரி எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தன. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா, என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து, முந்தைய தீர்ப்புகளை ரத்து செய்தது.
சாட்சியாளரின் முகவரி தொடர்பான சிறிய முரண்பாடு போன்ற அற்ப காரணங்களை முன்வைத்து, பல தசாப்தங்களுக்கு முன் பதிவு செய்யப்பட்ட ஆவணத்தை செல்லாததாக அறிவித்தது “மாபெரும் தவறு” என உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. பத்திரம் போலி எனவும், மிரட்டல் அல்லது ஏமாற்றம் மூலம் நிலம் வாங்கப்பட்டதாகவும் எந்த குற்றச்சாட்டும் இல்லை என்றும், 1957 முதல் குடும்பம் நிலத்தில் பயிர் செய்து வருவதை எதிர்தரப்பு மறுக்கவில்லை என்றும் கூறி, 1957 கிரையப் பத்திரம் செல்லும் என தீர்ப்பில் தெரிவித்தது. மேலும், சாதாரண பட்டா மாற்றத்திலிருந்து தொடங்கிய விவகாரம் பல சட்ட வடிவங்களை எடுத்து, விசாரணை அமைப்புகளின் தவறான புரிதலால் தேவையற்ற அலைச்சலாக மாறியதாகவும் நீதிமன்றம் வருத்தம் தெரிவித்தது.





