திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே தளவாய்பாளையத்தை சேர்ந்த சசிகலா என்பவர், யூடியூப் வீடியோ பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்த்த நிலையில் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
கர்ப்பிணியாக இருந்த அவர், கணவர் மற்றும் குடும்பத்தினர் உதவியுடன் வீட்டிலேயே பிரசவத்தை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன் குழந்தை பிறந்துள்ளது.
ஆனால் பிரசவத்திற்குப் பிறகு ரத்தப்போக்கு நிற்காததால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து, அவரை அவசரமாக கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் நஞ்சுக்கொடி முழுமையாக வெளியேறாமல் போனதன் காரணமாக கடும் ரத்தப்போக்கு ஏற்பட்டது உயிரிழப்புக்கு காரணம் என தெரியவந்துள்ளது. முதல் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பிறந்ததால், இரண்டாவது குழந்தையை இயற்கையாகப் பெற குடும்பத்தினர் முயன்றதாக விசாரணையில் தெரிய வந்தது.
பிறந்த குழந்தை அரசு மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





