சென்னை: மின் தேவை அதிகமாக உள்ள பகுதிகளில், அங்கேயே மின் உற்பத்தி செய்து தேவையை பூர்த்தி செய்யும் வகையில், பரவலாக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க மின் திட்டத்தை தமிழக மின் வாரியம் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் உள்ள 150 துணை மின் நிலைய வளாகங்களில் தலா 5 மெகாவாட் திறனில் சூரிய மின் நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 33 கிலோவோல்ட் மற்றும் 110 கிலோவோல்ட் திறன் கொண்ட துணை மின் நிலையங்கள் இடம்பெறுகின்றன. இதன் மொத்த திறன் 750 மெகாவாட் ஆகும்.
தற்போது திருவள்ளூர், தூத்துக்குடி, சேலம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அனல் மின் நிலையங்கள், செங்கல்பட்டு மற்றும் திருநெல்வேலியில் உள்ள அணுமின் நிலையங்கள், மேலும் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை உள்ளிட்ட இடங்களில் உள்ள காற்றாலை மற்றும் சூரிய மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரம், மின் வழித்தடங்கள் மூலம் பல பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு துணை மின் நிலையங்கள் வழியாக வினியோகிக்கப்படுகிறது.
சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களின் விரிவாக்க பகுதிகளில் குடியிருப்புகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் அதிகரிப்பதால் மின் தேவை உயர்ந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, குறைந்த திறனில் உள்ளூரிலேயே சூரிய மின் நிலையங்களை அமைப்பதால் புதிய மின் வழித்தடங்கள் அமைக்கும் தேவை குறையும்; மின்னழுத்த சிக்கல்கள் இல்லாமல் சீரான வினியோகம் சாத்தியமாகும் என அதிகாரிகள் கூறினர்.
மேலும், பகலில் உற்பத்தியாகும் மின்சாரத்தை சேமித்து இரவில் பயன்படுத்தும் வகையில் அதிக திறன் கொண்ட பேட்டரி கட்டமைப்பும் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிகள் விரைவில் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





