தமிழக அரசின் ஆய்வு கூட்டங்களில், துறைகள் தங்களின் செயல்பாடுகளை எழுத்து வடிவ ‘நோட்ஸ்’ ஆக அனுப்பாமல், புகைப்படங்களுடன் கூடிய ‘ஸ்லைடு’ வடிவில் விளக்க வேண்டும் என முதல்வர் விஜய் அனைத்து துறைகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

இந்த மாற்றம், கூட்டங்களில் விவாதம் நேரடியாகவும் எளிதாகவும் அமைய உதவும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதிகாரிகள் வட்டாரத்தில், இந்த நடைமுறை பிரதமர் நரேந்திர மோடி 2014ல் கொண்டு வந்த மாற்றத்தை நினைவூட்டுகிறது என்ற பேச்சும் உள்ளது. அப்போது பிரதமர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டங்களுக்கு மத்திய அமைச்சக செயலர்கள் பல கோப்புகள், காகிதங்களுடன் வருவது வழக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது.

நீளமான குறிப்புகள் மோடிக்கு விருப்பமில்லை என்பதால், விஷயங்களை சுருக்கமாகவும், திட்டங்களின் சாதக–பாதகங்களை கணினி ‘பவர் பாயின்ட்’ மூலம் திரையில் தெளிவாகக் காட்டியும் விளக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். அந்த நடைமுறை மத்திய அரசில் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் இதேபோன்ற வடிவத்தை கொண்டு வருவது நேரத்தை மிச்சப்படுத்துவதுடன், துறைகள் சொல்ல வருவது என்ன என்பதை முதல்வருக்கு தெளிவாக புரியச் செய்யும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.