சென்னை
சேவை ஒதுக்கீட்டின் கீழ் பட்டமேற்படிப்பு படித்த அரசு டாக்டர்களில், முன் அறிவிப்பின்றி பணிக்கு வராமல் இருந்தவர்களில் 680 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் அரசு டாக்டர்கள், சேவை ஒதுக்கீட்டின் கீழ் அரசு மருத்துவக் கல்லூரிகளில் பட்டமேற்படிப்பு படிக்க அனுமதி பெறுகின்றனர். அந்த ஒதுக்கீட்டை பயன்படுத்தி படிப்போர், ஓய்வு பெறும் வரை அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்ற வேண்டும் என்பது விதிமுறை. அதை மீறினால் ஒழுங்கு நடவடிக்கையுடன், ரூ.40 லட்சம் பிணையத் தொகையை வட்டியுடன் வசூலிக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என துறை குறிப்பிட்டுள்ளது.
முன் அறிவிப்பின்றி விடுப்பில் சென்று பணிக்கு வராத டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறப்போர் இயக்கத்தினர் புகார் அளித்ததைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் துறை விளக்கம் வெளியிட்டது. சிலர் தன்னிச்சையாக பணிக்கு வராமல் இருந்து, தனியார் மருத்துவமனைகளில் பணியாற்ற சென்றதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
அவர்கள் மீண்டும் பணியில் சேர அறிவுறுத்தப்படுவதாகவும், தொடர்ந்து வராமல் இருந்தால் ‘17(பி)’ விதியின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு பணி நீக்கம் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்றும், பிணையத் தொகையை வட்டியுடன் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் துறை தெரிவித்துள்ளது.
இதுவரை 1,420 டாக்டர்கள் முன் அறிவிப்பின்றி பணிக்கு வராமல் இருப்பதாகவும், அவர்களில் 680 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 740 பேர் ஒழுங்கு நடவடிக்கையில் உள்ளதாகவும் துறை கூறியுள்ளது. விதிகளை மீறுவோருக்கு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





