சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) சமீபத்தில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்களுடன் நடத்த திட்டமிடப்பட்ட சந்திப்பை முதல்வர் விஜய் ரத்து செய்ததாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் நடராஜன், ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு, சம்பத் உள்ளிட்டோர் த.வெ.க.வில் இணைந்தனர். மேலும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த மரகதம், இசக்கி சுப்பையா, சத்யபாமா, ஜெயகுமார் ஆகியோரும் கட்சியில் சேர்ந்ததாக கூறப்படுகிறது.
முதல்வரை சந்திக்க நேரம் கோரி, அமைச்சர்கள் ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனாவிடம் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாகவும், அதன் பின்னர் சனிக்கிழமை சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
சந்திப்புக்காக அனைவரும் பெரும் எதிர்பார்ப்புடன் சென்னை வந்த நிலையில், இயக்குநர் பாக்யராஜ் மறைவையடுத்து கடைசி நேரத்தில் சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் முன்னாள் அமைச்சர்கள் ஏமாற்றமடைந்தனர் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.





