சென்னை: அரசுப் பணிக்காக முயற்சிக்கும் இளைஞர்களுக்கு அநீதி நடந்துள்ளதாகவும், குறிப்பாக மின்பகிர்மானக் கழகத்தின் உதவி மின்பொறியாளர் (AE) நியமனச் செயல்முறையில் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ‘வீ த லீடர்ஸ்’ நிறுவனர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், 2020-ல் TNPDCL-ல் AE நியமனத்துக்கான தேர்வு கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டதாகவும், பின்னர் 2022-ல் நிர்வாகக் காரணங்களை முன்வைத்து அந்தத் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்பட்டதாக TANGEDCO அறிவித்ததாகவும் குறிப்பிட்டார்.
2020 முதல் காத்திருந்த விண்ணப்பதாரர்களுக்கு எந்த மறு அறிவிப்பும் இல்லாமல் காத்திருக்க வைத்தபடி, அதே பணியிடங்களை பொதுப்பணித்துறை சார்ந்த தேர்வுகள் மூலம் நிரப்ப முடிவு செய்தது அநீதி என அவர் கூறினார். மேலும், நிர்வாகக் குளறுபடிகள் காரணமாக தகுதியான இளைஞர்களுக்கு வயது வரம்பில் பெரிய பாதிப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.
வயது வரம்பு தளர்வு கோரிக்கை நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போதே, 2025-ல் நடைபெற்ற AE காலிப்பணியிடங்களுக்கான TNPSC தேர்வு முடிவுகள் வெளியானதாகவும், கலந்தாய்வு தொடங்கும் முன்பே வயது காரணமாக நல்ல மதிப்பெண் பெற்றவர்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டபோது பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு தளர்வு வழங்கியதாகவும், 2013-ல் இதேபோன்ற சூழலில் மின்சார வாரியம் ஐந்து ஆண்டுகள் வயது தளர்வு வழங்கியதாகவும் அவர் நினைவூட்டினார். 2019 முதல் 2024 வரை பணியிடங்கள் நிரப்பப்படாத நிலையில் தற்போது பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கும் வயது வரம்பில் தளர்வு வழங்க அரசு உடனடியாக தலையிட வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தினார்.





