சென்னை: அரசு கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் தேர்வு முடிவுகளில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறிப்பாக, ஆங்கிலப் பாடத் தேர்வு முடிவுகளில் தேர்வர்களை அடையாளப்படுத்தும் வகையில் “வண்ண குறியீடுகள்” இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 8,000க்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) கடந்த ஆண்டு 2,708 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டது. வெளியிடப்பட்ட தகவலின்படி, 47,047 பேர் விண்ணப்பித்த நிலையில், டிசம்பர் 27 அன்று நடந்த தேர்வை 42,064 பேர் எழுதினர்; முடிவுகள் ஜூன் 25 அன்று வெளியானது.

மதிப்பீட்டில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக கவுரவ விரிவுரையாளர்களும் தேர்வர்களும் கூறுகின்றனர். தாள் 2-ல் 10 மதிப்பெண் வீதம் ஐந்து கேள்விகள் இருந்த நிலையில், சிலருக்கு 49 மதிப்பெண் வழங்கப்பட்டதாகவும், சிலருக்கு பூஜ்யம் வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. மேலும், பணி மூப்பில் முன்னிலையில் இருப்பவர்களுக்கு ஒற்றை இலக்க மதிப்பெண்களே வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்நாடு அனைத்து அரசு கல்லூரி யு.ஜி.சி. தகுதி கவுரவ விரிவுரையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் தங்கராஜ், தேர்வை ரத்து செய்து முறைகேடுகள் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை செயலர் மற்றும் கல்லூரி கல்வி ஆணையரை சந்தித்து மனு அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

இதற்கிடையில், அ.தி.மு.க. பொதுச் செயலர் பழனிசாமி, மதிப்பீட்டு அளவுகோல், மாதிரி விடைகள் மற்றும் மதிப்பெண் வழங்கும் முறை ஆகியவற்றை தேர்வு வாரியம் வெளியிட வேண்டும் என்றும், விசாரணை நடத்தி தவறு செய்தோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.