16 வயதுக்குட்பட்டோர் சமூக வலைதள கணக்குகளை வைத்திருப்பதற்கான தடையை கடுமையாக அமல்படுத்தும் வகையில், அந்தத் தடையை மீற அனுமதிக்கும் தளங்களுக்கு விதிக்கப்படும் அதிகபட்ச அபராதத்தை ஆஸ்திரேலிய அரசு இரட்டிப்பாக்கியுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி இந்தத் தடை அறிவிக்கப்பட்டது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், கிக், ரெட்டிட், ஸ்னாப்சாட், த்ரெட்ஸ், எக்ஸ், யுடியூப், டிவிட்ச் உள்ளிட்ட 10 தளங்களில் 16 வயதுக்கு உட்பட்டோர் கணக்கு வைத்திருக்கக் கூடாது என சட்டம் கூறுகிறது. முன்பு, இத்தகைய கணக்குகள் கண்டறியப்பட்டால் நிறுவனங்களுக்கு ரூ.322 கோடி (49.5 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்) வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டிருந்தது.

சட்டம் அமலுக்கு வந்த பின்னர், குழந்தைகளின் கணக்குகள் என அடையாளம் காணப்பட்ட 50 லட்சத்துக்கும் அதிகமான கணக்குகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நீக்கியதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஆறு மாதங்கள் கடந்தும் சிறுவர்கள் மறைமுகமாக லாக்-இன் செய்து ரீல்ஸ் பார்ப்பதும், சாட் செய்வதும் தொடர்வதாக புகார்கள் எழுந்தன.

இதையடுத்து நடத்தப்பட்ட ஆய்வில், 12 முதல் 15 வயது வரையிலான சிறுவர்களில் 85 சதவீதம் பேர் இன்னும் தடையை மீறி சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருவது தெரியவந்தது. இதன் அடிப்படையில், தடையை மதிக்காமல் சிறுவர்களை தளத்திற்குள் அனுமதிக்கும் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் அதிகபட்ச அபராதம் ரூ.644 கோடி (99 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்) ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தகவல் தொடர்புத் துறை அமைச்சர் அனிகா வெல்ஸ், டெக் நிறுவனங்கள் பெயரளவில் மட்டுமே சட்டத்தைப் பின்பற்றுகின்றன; பெரிய நிறுவனங்கள் மேலும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என கூறினார். இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகளும் 16 வயதுக்குட்பட்டோருக்கான ஆன்லைன் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.