போதையில்லா தமிழகத்தை உருவாக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று முதல்வர் விஜய் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் அவர் இந்த அறிவுறுத்தலை வழங்கினார்.

முதல்வர் தலைமையில் தொடங்கிய இந்த இருநாள் மாநாடு நாளையும் தொடருகிறது. மூத்த நிர்வாக மற்றும் காவல் அதிகாரிகளுடன் ஆலோசித்த பின்னர், இன்று அவர் மாநாட்டில் உரையாற்றினார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்றும், கட்சிசார்பு அடிப்படையில் முன்னுரிமை கொடுக்காமல் பொதுமக்களுக்கான அரசாக செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். அரசு திட்டங்கள் முழுமையாக அமல்படுவதை உறுதி செய்யவும் வலியுறுத்தினார்.

மேலும், போதைப் பழக்கத்தை ஒழிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாதபடி உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். தமது கட்சியினரை உட்பட அரசியல் தலையீடு இன்றி காவல்துறை செயல்பட முடியும் வகையில் நடவடிக்கை இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.