புதுடில்லி: தலைநகரின் காற்றுமாசைக் கட்டுப்படுத்தும் நோக்கில் டில்லி அரசு புதிய மின்சார வாகன (EV) கொள்கையை அனுமதித்துள்ளது. முதல்வர் ரேகா குப்தா, கவர்னரின் ஒப்புதல் கிடைத்த பின் ஜூலை 1 முதல் இது அமலுக்கு வரும் என தெரிவித்தார்.
இந்த திட்டத்தின் படி, வரும் ஜனவரி 1 முதல் மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ ரிக்ஷாக்கள் மட்டுமே பதிவு செய்யப்படும். மேலும், பெட்ரோல் மற்றும் சிஎன்ஜியில் இயங்கும் இருசக்கர வாகனங்களுக்கான பதிவு 2028 ஏப்ரல் 1 முதல் நிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் ஆண்டில் ஊக்கத்தொகையாக மின்சார இருசக்கர வாகனங்கள் வாங்குபவர்களுக்கு ரூ.30,000 மற்றும் மின்சார மூன்று சக்கர வாகனங்கள் வாங்குபவர்களுக்கு ரூ.50,000 மானியம் வழங்கப்படும். இந்த கொள்கை 2030 ஜூலை 1 வரை அமலில் இருக்கும்; அடுத்த நான்கு ஆண்டுகளில் கட்டப்படியாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது.
கொள்கை அமலாக்கத்திற்காக அடுத்த நான்கு ஆண்டுகளில் ரூ.7,000 கோடி செலவிடப்படும் என்றும், மின்சார வாகன உள்கட்டமைப்பு மற்றும் ஆண்டுதோறும் செலுத்தும் சாலை வரிகளை ரத்து செய்வதற்கான திட்டங்களுக்கு கூடுதலாக ரூ.8,000 கோடி முதலீடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் வாகன வாங்கும் ஊக்கத்தொகை, பழைய வாகனங்களை அழிப்பதற்கான ஊக்கம், சார்ஜிங் உள்கட்டமைப்பு விரிவாக்கம் உள்ளிட்ட வழிகளில் மக்கள் ரூ.15,000 கோடி மதிப்பிலான பலன்களை பெறுவார்கள் என அரசு மதிப்பிட்டுள்ளது.
டில்லி கடந்த சில ஆண்டுகளாக கடுமையான காற்றுமாசால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் வாகன புகையால் சுமார் 23% மாசு ஏற்படுவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். 2020 ஆகஸ்டில் அறிமுகமான இந்த EV கொள்கை 2023 ஆகஸ்டில் காலாவதியான நிலையில், தற்போது புதிய நடவடிக்கைகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது.





