தேர்தல் வெளிப்படைத்தன்மையில் உலகின் முக்கிய ஜனநாயக நாடுகளுக்கு இந்தியா முன்னோடியாக இருப்பதாக மத்திய தலைமை தேர்தல் கமிஷனர் (CEC) ஞானேஷ் குமார் தெரிவித்தார்.
காஷ்மீரில் மூன்று நாள் பயணத்தில் இருந்த அவர், செய்தியாளர்களிடம் பேசியபோது, நாட்டின் ஜனநாயகத்தின் முக்கியத் தூண்களாகக் கருதப்படும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுடன் கலந்துரையாடியதாக கூறினார். இந்திய தேர்தல் நடைமுறைகளின் வலிமை குறித்து அப்போது விவாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, வாக்குப்பதிவு, ஓட்டு எண்ணிக்கை என ஒவ்வொரு கட்டத்திலும் தேர்தல் நடைமுறைகள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுவதாகவும், அதனுடன் தணிக்கையும் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் விளக்கினார்.
இந்த வலுவான அமைப்புகளை கருத்தில் கொண்டால், தேர்தல் வெளிப்படைத்தன்மையில் இந்தியா உலகளவில் முன்னணியில் இருப்பதாக அவர் கூறினார். மேலும், ஜனநாயகம் மற்றும் தேர்தல் உதவிக்கான சர்வதேச நிறுவனத்தின் தலைமை பொறுப்பை இந்தியா வகிப்பதும் குறிப்பிடத்தக்கது என தெரிவித்தார்.
தேர்தல் பணிகளில் ஈடுபடும் அனைத்து நிலை ஓட்டுச்சாவடி அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அவர் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளை தெரிவித்தார்.





