துணை ஜனாதிபதியும் ராஜ்யசபா தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணன், ராஜ்யசபாவிற்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 8 உறுப்பினர்களுக்கு திங்களன்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, தலைவர் அறையில் தனியாக பதவியேற்றார். மற்ற ஏழு உறுப்பினர்கள் ராஜ்யசபா அவையில் பதவியேற்றனர்.

கார்கே மற்றும் தருண் சுக் தவிர, புதிய உறுப்பினர்களில் குஜராத்தைச் சேர்ந்த ஜிதேந்திர மேக்ஜிபாய் கன்சாரியா, மான்சிங் மெராமன் பர்மர், கர்நாடகாவைச் சேர்ந்த எம். நாகராஜா, மகாராஷ்டிராவைச் சேர்ந்த ராஜேந்திர ஹிராலால் ஜெயின், மணிப்பூரைச் சேர்ந்த சாரதா தேவி, ராஜஸ்தானைச் சேர்ந்த அல்கா சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பதவியேற்பு நிகழ்வில் ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ், பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மற்றும் சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பதவியேற்ற பின்னர், காங்கிரஸ் தலைமை, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கும், கட்சியின் எம்.பி.க்கள் மற்றும் தொண்டர்களுக்கும் கார்கே நன்றி தெரிவித்தார். வரவிருக்கும் பார்லிமென்ட் மழைக்காலக் கூட்டத்தொடரில் பணியாற்ற ஆவலாக இருப்பதாகவும் அவர் கூறினார்.