புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றி அமைக்கப்படலாம் என பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர்கள் பலரை கட்சி அமைப்பு பணிகளுக்கு மாற்றுவதும், பல மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமிப்பதும் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது.
2024 மக்களவைத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியமைத்தது; மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார். ஆட்சியின் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், முக்கிய இலாகாக்களில் “புதிய ஆற்றல்” தேவை என்ற கருத்தின் அடிப்படையில் மாற்றங்கள் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் பிரதமர் மோடியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து பேசியது, இந்த யூகங்களை மேலும் வலுப்படுத்தியதாக கூறப்படுகிறது. முக்கிய பொறுப்புகளில் புதுமுகங்கள், சில அமைச்சர்களை கட்சி பொறுப்புகளுக்கு மாற்றுதல், சிலரின் இலாகாக்களை மாற்றுதல் போன்றவை இடம்பெறலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
‘நீட்’ வினாத்தாள் கசிவு மற்றும் சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு டிஜிட்டல் மதிப்பெண் வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடி போன்ற பின்னணியில் கல்வி அமைச்சகத்தில் மாற்றம் இருக்கலாம் எனவும் பேசப்படுகிறது. அதேபோல் பெட்ரோலியத் துறையிலும் மாற்றங்கள் வரலாம்; மேலும் “ஒருவருக்கு ஒரு பதவி” என்ற கொள்கையால் மாநிலக் கட்சி தலைமைப் பொறுப்புகளும் வகிக்கும் சில அமைச்சர்கள் அமைச்சரவையிலிருந்து வெளியேற்றப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
அடுத்தாண்டு உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளதால், அந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவையில் கூடுதல் இடம் கிடைக்கலாம். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த எம்.பி.க்களுக்கும் வாய்ப்பு இருக்கலாம் எனவும், மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படும் திரிணமுல் காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி), ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த அதிருப்தி எம்.பி.க்களுக்கும் இடம் வழங்கப்படலாம் எனவும் வட்டாரங்கள் கூறுகின்றன. அடுத்த மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்க உள்ள பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்பாகவே மாற்றங்கள் செய்யப்படலாம்; ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பிறகே தெளிவான விவரங்கள் தெரிய வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





