புதுடில்லி: நாட்டின் பாதுகாப்புத் திறன் “கடல் முதல் வான் வரை” வலுப்பெற்று வருவதாகவும், இந்தியா தற்சார்பு பாதையில் முன்னேறி வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

மாதந்தோறும் ஒளிபரப்பாகும் ‘மன் கீ பாத்’ வானொலி நிகழ்ச்சியின் 135வது உரையில், கடந்த ஆறு மாதங்களில் ஏற்பட்ட முக்கிய முன்னேற்றங்களை அவர் குறிப்பிட்டார். குறிப்பாக பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் உள்நாட்டு தயாரிப்பு சாதனைகளை அவர் முன்னிறுத்தினார்.

சி-295 ரக ராணுவ போக்குவரத்து விமானம் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு அதன் முதல் பறப்பு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதாக அவர் கூறினார். மேலும், குஜராத்தின் வதோதராவில் இதே வகை 40 விமானங்கள் தயாரிக்கப்படுவதாகவும், இதனால் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பயனடையும்; விமானத் துறைக்கு ஊக்கம் கிடைக்கும்; வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தின் கொல்கட்டாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐ.என்.எஸ். துனகிரி, ஐ.என்.எஸ். ஷன்சோதக் மற்றும் ஐ.என்.எஸ். அக்ரே ஆகிய கப்பல்கள் கடற்படையில் இணைக்கப்பட்டதாகவும், அவை உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டவை என்றும் மோடி கூறினார். மேலும், டிஆர்டிஓ நிறுவனம் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தொலைதூர நில தாக்குதல் க்ரூஸ் ஏவுகணை (LRLACM) சோதனையை வெற்றிகரமாக நடத்தியதாகவும், தொழிற்துறை கூட்டாளிகளுடன் இணைந்து இது உருவாக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அதே உரையில், டில்லியில் உள்ள மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகம் பி.டெக். படிப்பில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் பாடங்களை தொடங்கவுள்ளதாக கூறி, பாரம்பரிய அறிவையும் நவீன தொழில்நுட்பத்தையும் இணைக்கும் முக்கிய முன்னேற்றம் என அவர் வரவேற்றார். மேலும், டொமினிக்கன் குடியரசில் உள்ள ஒரு குழு ஒலிப்பதிவுகளை கேட்டு ஸ்ரீ ருத்ரம், ஸ்ரீ சூக்தம் போன்ற வேத பாராயணங்களை கற்றுவருவது குறித்து அவர் குறிப்பிட்டார்.