போபாலில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். தொடர்பான நிகழ்ச்சியில் மத்திய பிரதேச அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா பேசிய கருத்துகள் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அவரது உரை தொடர்பான வீடியோ வெளியாகியதைத் தொடர்ந்து விவாதம் தீவிரமடைந்துள்ளது.
நிகழ்ச்சியில் அவர், ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர பலர் ஆர்வம் காட்டுவதால் அமைப்பு வளர்ந்துள்ளதாக கூறினார். அதே நேரத்தில் அதிகமானோர் சேர்ந்ததால் “கூட்ட நெரிசல்” ஏற்பட்டுள்ளதாகவும், “நல்ல குணம் படைத்தவர்கள் பற்றாக்குறை” ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும், முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் பா.ஜ. அரசு அமைந்ததிலிருந்து நிர்வாகத்தில் உள்ள உயரதிகாரிகள் ஆர்.எஸ்.எஸ். உடன் தங்களை இணைத்துக் காட்ட முயல்கிறார்கள் எனவும் அவர் கூறினார். ஒரு அதிகாரி தன்னிடம் ‘ஷாகாவுக்கு சென்றேன்’ என்று கூறியதாகவும், அரசு அமைவதற்கு முன் ஏன் இதை சொல்லவில்லை என்று கேட்டதாகவும் அவர் எடுத்துக்காட்டினார்.
இதற்கு கண்டனம் தெரிவித்த மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜித்து பட்வாரி, நிர்வாகத்தில் சித்தாந்த அடையாளப்படுத்தும் போக்கு அதிகரிப்பது நடுநிலைமைக்கும் அரசியல் மாண்புகளுக்கும் அச்சுறுத்தல் என்றார். அரசியல் சாசனப்படி அரசு அதிகாரிகள் நாட்டுக்கும் நிர்வாகத்திற்குமே விசுவாசமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி, ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் ம.பி. கவர்னர் கவனம் செலுத்தி அரசு ஊழியர்களின் நடுநிலைமை குறித்து மறுஆய்வுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரினார்.





