கர்நாடகாவில் பெண் டாக்டரிடம் ரூ.4.15 கோடி சைபர் மோசடி நடந்ததாக கூறப்படும் வழக்கில், பணப்பரிமாற்ற பாதையில் தமிழகத்தின் கன்னியாகுமரியை சேர்ந்த பாதிரியாரின் வங்கி கணக்கு தொடர்புடையதாக போலீசார் கண்டறிந்ததைத் தொடர்ந்து விசாரணை தீவிரமடைந்துள்ளது.
பாகல்கோட் மாவட்டம் ஜமகன்டி தாலுகாவில் வசிக்கும் 40 வயது பெண் டாக்டரை, 2025 பிப்ரவரியில் மொபைல் போனில் தொடர்பு கொண்ட ஒருவர், “நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும்” என்று கூறி ஈர்த்ததாக தெரிவிக்கப்பட்டது. அதை நம்பிய அவர், 21 வங்கி கணக்குகளுக்கு பல தவணைகளாக ரூ.4.15 கோடியை அனுப்பியதாகவும், பின்னர் லாபமும் முதலீட்டு தொகையும் திரும்ப கிடைக்காததால் சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது.
புகாரின் அடிப்படையில் போலீசார் பணம் சென்ற கணக்குகளை ஆய்வு செய்தபோது, “ராம் டிராவல்ஸ்” என்ற கணக்குக்கு ரூ.19 லட்சம் அனுப்பப்பட்டிருந்தது தெரிய வந்தது. அந்த கணக்கிலிருந்து கன்னியாகுமரி சர்ச் பாதிரியார் ரஜினிகுமார் (50) என்பவரின் கணக்குக்கு ரூ.8 லட்சம் மாற்றம் செய்யப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை என்றும் கூறப்படுகிறது. கைது அச்சத்தால் அவர் பெங்களூரு 51வது செஷன்ஸ் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனுத் தாக்கல் செய்தார்.
ரஜினிகுமார், கன்னியாகுமரியின் ஜெபமலையில் “ஜீசஸ் லிபரேன்ஸ் மினிஸ்ட்ரி” என்ற பெயரில் டிரஸ்ட் நடத்துவதாகவும், பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டுவதற்காக பெங்களூரில் தனது பெயரில் வங்கி கணக்கு திறந்துள்ளதாகவும், தனது கணக்குக்கு ரூ.8 லட்சம் வந்தது குறித்து சைபர் மோசடியில் தனக்கு தொடர்பில்லை என்றும் வாதிட்டார். ஆனால் போலீசாரின் ஆட்சேபனையை நீதிமன்றம் ஏற்று முன்ஜாமினை மறுத்ததால், அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.





