மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் 3 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், 65 வயது நபருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

மே 1 அன்று நடந்த இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே நாளில் போராட்டங்களும் வெடித்தன. இந்த வழக்கில் பீம்ராவ் காம்ப்ளே என்பவர் கைது செய்யப்பட்டார்.

சம்பவத்துக்குப் பிறகு முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், அஜய் மிசாரை சிறப்பு அரசு வழக்கறிஞராக நியமித்து, வழக்கை விரைவாக நடத்த உத்தரவிட்டார். போலீசார் 15 நாட்களுக்குள் 82 சாட்சிகளின் பெயர்களுடன் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

குற்றம் நடந்த 55 நாட்களுக்குப் பிறகு இன்று தீர்ப்பு வெளியானது. இந்த வழக்கை ‘அரிதானவற்றில் அரிதானது’ என வகைப்படுத்தி நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது.

பாதிக்கப்பட்ட தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விபுல் துஷிங், குற்றத்தின் தன்மை மிகக் கொடூரமானது என்றும், சந்தேகத்திற்கு இடமின்றி ஆதாரங்களுடன் குற்றம் நிரூபிக்கப்பட்டதை கருத்தில் கொண்டு நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியதாகவும் தெரிவித்தார்.