செஷல்ஸ் நாட்டின் உயரிய விருதான “கார்டியன் ஆப் தி புளூ ஹாரிசான்” விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு அதிபர் பாட்ரிக் ஹெர்மனி வழங்கினார். இந்தியாவின் உயர்ந்து வரும் உலகளாவிய செல்வாக்கையும், பருவநிலை மாற்றத் துறையில் இந்தியாவின் செயல்திறன் மிக்க தலைமையையும் இது பிரதிபலிப்பதாக குறிப்பிடப்பட்டது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பிரதமர் மோடியின் உறுதியான அர்ப்பணிப்பும், சிறிய தீவு நாடுகளின் விருப்பங்களை முன்னெடுத்து செல்லும் அவரது பங்களிப்பும் இந்த அங்கீகாரத்துக்கான காரணங்களாக கூறப்பட்டன.
“கார்டியன் ஆப் தி புளூ ஹாரிசான்” விருதை பெறும் முதல் தலைவர் பிரதமர் மோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது உருவாக்கப்பட்ட சில நாட்களிலேயே அவருக்கு வழங்கப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு செஷல்ஸ் அரசு விருதுகள் தொடர்பான சீர்திருத்தங்களை கொண்டு வந்ததாகவும், அதன்படி செஷல்ஸ் குடியரசு விருது உள்ளிட்ட முந்தைய அனைத்து தேசிய விருதுகளையும் ரத்து செய்து புதிய விருதை உருவாக்க முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. முந்தைய உயரிய விருதில் அதிபர்கள் தானாகவே தகுதி பெறும் விதிமுறை இருந்ததுடன், வெளிப்படைத்தன்மை மற்றும் வழங்கும் முறையைச் சுற்றி சர்ச்சைகள் எழுந்ததால் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டதாக தகவல் தெரிவிக்கிறது.
இந்த மாற்றங்களுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட புதிய விருது, உருவான சில நாட்களிலேயே பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டதாக செய்தி கூறுகிறது.





