முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான், இலங்கையில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படும் ஒரு எம்.பி.யை தாம் சந்தித்து பேசியதாக பரவும் தகவல்களை கடுமையாக மறுத்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அந்த குற்றச்சாட்டு “கற்பனையானது” என்றும், அதில் “துளிகூட உண்மை இல்லை” என்றும் தெரிவித்தார்.
மேலும், மதம் மாறிய முஸ்லிம்களுக்கான சான்றிதழ் தொடர்பான வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பு இடஒதுக்கீடு கொள்கைக்கு முரணாக இருப்பதாக கூறினார். இதுகுறித்து முதல்வர், சட்ட அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசித்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
இலங்கை பயணங்கள் குறித்து விளக்கமளித்த அமைச்சர், தமிழகத்தில் சிறுபான்மையினருக்காக முஸ்லிம் லீக் செயல்படுவது போல, இலங்கையில் முஸ்லிம் காங்கிரஸ் இருப்பதாக கூறினார். அதன் தலைவர் ரவுப் ஹக்கீம் அழைப்பின் பேரில் தாம் இரண்டு முறை இலங்கை சென்றதாகவும் தெரிவித்தார்.
2019ல் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு தாம் மட்டும் சென்றதாக கூறப்படுவது தவறு என்றும், தி.மு.க. எம்.பி. கனிமொழி, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, வி.சி.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஆளூர் ஷாநவாஸ் உள்ளிட்ட சுமார் 30 பேர் கலந்து கொண்டதாகவும் கூறினார். கடந்த செப்டம்பரில் நடந்த நிகழ்ச்சிக்கும் தாம் மட்டும் செல்லவில்லை; தி.மு.க. முன்னாள் எம்.பி. அப்துல்லா உள்ளிட்டோரும் வந்ததாகவும் தெரிவித்தார்.





