சென்னை: முந்தைய தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடந்ததாக கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து, அதற்கு காரணமானவர்கள் யார் என்பதையும் கண்டறியும் வகையில் முதல்வர் விஜய் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, கடந்த தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆட்சிக் காலங்களில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகளை அரசு துறைகள் வாரியாக பரிசீலித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு துறையிலும் ‘வெள்ளை அறிக்கை’ வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த கட்டமாக, கடந்த ஐந்தாண்டுகளில் அரசு அலுவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அதிகாரிகளின் வெளிநாட்டு பயண விவரங்கள், பதவி உயர்வுக்கு வழங்கப்பட்ட அனுமதிகள், பணியாளர் நியமனம் மற்றும் இடமாற்றம், காத்திருப்போர் பட்டியலில் உள்ள அதிகாரிகள்/அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு பதிவுகளை அனுப்புமாறு அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் உதவிக்காக உருவாக்கப்பட்ட உதவியாளர் பதவி தொடர்பான விவரங்கள், ஒழுங்கு நடவடிக்கை அல்லது குற்ற நடவடிக்கைக்கு உள்ளானவர்கள், கருணை அடிப்படையில் பணியில் சேர்ந்தவர்கள், துறை ரீதியான வழக்குகள், நிலம் கையகப்படுத்த வேண்டிய திட்டங்கள் போன்ற தகவல்களையும் துறைகள் அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நிதி அமைச்சர் மரிய வில்சன், மாநில வருவாய் பெரிய அளவில் குறைந்துள்ளதாகவும், வரும் நாட்களில் வருவாய் இழப்புகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். முந்தைய தி.மு.க. ஆட்சிக் கால முறைகேடுகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு செய்து வருவதாகவும், விரைவில் முடிவுகள் தெரியவரும் என்றும் அவர் தெரிவித்தார்.