தமிழ்நாட்டில் அனைத்து அரசு பஸ்களிலும் மகளிருக்கு இலவச பயணத்தை அமல்படுத்தும் திட்டம் தயாராகி விட்டதாகவும், இதற்கான அறிவிப்பை முதல்வர் விரைவில் வெளியிடுவார் என்றும் போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்தார்.

சேலத்தில் குமாரசாமிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்த அவர், சீலநாயக்கன்பட்டியில் நடைபெற்ற மருத்துவ முகாமையும் தொடங்கி வைத்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், செயல்திட்டம் வகுக்கப்பட்டு ஆலோசனைகள் முடிவுற்றதாக கூறினார்.

போக்குவரத்து துறையின் வருவாயை உயர்த்த உருவாக்கப்பட்ட நடவடிக்கைகள் ஒவ்வொன்றாக அமல்படுத்தப்பட்டு வருவதாகவும், அதே நேரத்தில் துறையில் உழைக்கும் தொழிலாளர்களுக்கு உதவும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குக்கிராமங்களை மாநகரங்களுடன் இணைக்கும் போக்குவரத்து வசதி முதல்வரின் கொள்கை என குறிப்பிட்ட அமைச்சர், அரசு பஸ்சில் பயணித்த போது முதல்வர் கூறியபடி அனைவரும் ஏசி பஸ்சில் பயணிக்க வேண்டும் என்பதே இலக்கு என்றார். அதற்கேற்ப ஏசி பஸ்கள் அதிகம் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

மேலும், சேலம் அரசு மருத்துவமனையில் புதிய ஏசி கருவிகள் பொருத்துவது குறித்து சுகாதாரத்துறை அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.