தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 கோடி முதல் ரூ.7,000 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
திருச்செந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 12 ஆண்டுகளில் நாடு முழுவதும் ரயில்வே, தேசிய நெடுஞ்சாலைகள், விமான நிலைய விரிவாக்கம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் நீளமான ரன்்வே அமைக்கப்பட்டுள்ளதாகவும், தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் வரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 77 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். தினமும் சுமார் 50,000 பக்தர்கள் வந்து செல்லும் திருச்செந்தூரில், ரயில் நிலையத்தில் கூடுதல் அடிப்படை வசதிகள் தேவைப்படுகிறதா என்பதைக் குறித்து பரிசீலிக்கப்படும் என்றார்.
முந்தைய ஆட்சிக் காலத்தில் தமிழகத்திற்கு ரயில்வே திட்டங்களுக்கு ஆண்டுக்கு ரூ.800 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், தற்போது ஆண்டுதோறும் ரூ.6,000–7,000 கோடி வரை ஒதுக்கீடு வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.





