அமெரிக்கா–ஈரான் இடையே சமீபத்தில் கையெழுத்தான 14 அம்ச தற்காலிக அமைதி ஒப்பந்தத்திற்குப் பிறகும், இரு நாடுகளுக்கிடையேயான மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இந்த சூழலில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ராணுவ ரீதியாக மோதலை முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் “ஈரான்” என்ற நாடே உலக வரைபடத்தில் இல்லாமல் போகும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமைதி ஒப்பந்தத்துக்குப் பின்னர் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சர்வதேச வணிகக் கப்பல் போக்குவரத்தை திறக்க ஈரான் ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், ஓமனை ஒட்டிய கடற்பகுதியில் கப்பல் போக்குவரத்துக்கான வழித்தடத்தை விரிவுபடுத்தப் போவதாக அமெரிக்க கடற்படை ஆதரவுடன் பன்னாட்டு கடல்சார் அமைப்பு (IMO) அறிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஒரு சரக்கு கப்பல் தாக்கப்பட்டதாகவும், அதற்கு ஈரானே காரணம் எனவும் தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து அமெரிக்கா ஈரான் மீது, மேலும் மேற்காசிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தியதாகவும், இரண்டாவது நாளாகவும் தாக்குதல்கள் தொடர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

டிரம்ப் தனது சமூக வலைதள பதிவில், கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் மீறியதாக குற்றம்சாட்டினார். அமெரிக்காவின் பொறுமைக்கு எல்லை உண்டு என்றும், மோதலை ராணுவ ரீதியாக முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் ஈரான் என்ற நாடே இல்லாமல் போகும் என்றும் அவர் கூறினார்.

இதற்கு பதிலளித்த ஈரான் பார்லிமென்ட் சபாநாயகர் முகமது பாகர் காலிபாப், அமெரிக்காவின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் அமெரிக்காவின் ஒவ்வொரு குடும்பத்தையும் “வாழும் நரகத்துக்குள்” தள்ளும் என எச்சரித்தார். மேலும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கட்டளைகளை டிரம்ப் பின்பற்றுவதாக குற்றம்சாட்டி, அதனால் பிராந்தியம் முழுவதும் எரியக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.