சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.15 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், தொடர்புடைய 35 வயது கென்யா பெண் கைது செய்யப்பட்டதாகவும் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை (டிஆர்ஐ) அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரகசிய தகவலின் அடிப்படையில், ஜூன் 29 அன்று அடிஸ் அபாபாவிலிருந்து சென்னை வந்த எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானத்தை டிஆர்ஐ தனிப்படை கண்காணித்தது. சுற்றுலா விசாவில் எத்தியோப்பியா வழியாக வந்த அந்த பெண்ணின் நடத்தை சந்தேகத்தை ஏற்படுத்தியதால் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததாகவும், பின்னர் சுங்கத்துறை அலுவலகத்தில் தொடர்ந்து கேள்விகளுக்கு பதிலளிக்காமல் ஒத்துழைக்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது. அவரது உடைமைகளை சோதித்தபோதும் சந்தேகத்திற்கிடமான பொருள் எதுவும் கிடைக்கவில்லை.
இதையடுத்து விமான நிலைய மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுத்ததில், அவர் வயிற்றுக்குள் பல கேப்சூல்கள் விழுங்கி வந்திருப்பது தெரிய வந்தது. மருத்துவ குழுவினரின் உதவியுடன் 70 கேப்சூல்கள் வெளியே எடுக்கப்பட்டன; அவற்றில் உயர்தர கொக்கைன் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மொத்தம் சுமார் 850 கிராம் கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.15 கோடி எனவும் கூறப்படுகிறது. சென்னையில் யாரிடம் ஒப்படைக்க திட்டமிட்டார் என்பதையும், சர்வதேச கடத்தல் வலையமைப்பின் தொடர்புகளையும் கண்டறிய டிஆர்ஐ தீவிர விசாரணை நடத்தி வருகிறது.





