சென்னையில் சில காலமாக குறைந்திருந்த ஆபத்தான பைக் ரேஸ் மற்றும் ‘வீலிங்’ சாகசங்கள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, அடையாறு மற்றும் பெசன்ட் நகர் பகுதிகளில் நள்ளிரவில் ஐந்துக்கும் மேற்பட்ட பைக்குகளில் வந்த இளைஞர்கள் சாகச ஓட்டத்தில் ஈடுபட்டு வாகன ஓட்டிகளை அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது.

பாதுகாப்புக்காக போலீசார் சாலையில் வைத்திருந்த ‘பேரிகேட்’ எனும் இரும்புத் தடுப்பை இழுத்துச் சென்றதுடன், தீப்பொறி பறக்கும் வகையில் வீலிங் செய்து அடாவடியில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீஸ் ரோந்து வாகனம் அருகில் இருந்தபோதும் அச்சமின்றி இச்செயலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு உள்ளது.

பைக் ரேஸ் அல்லது சாகச ஓட்டத்தில் ஈடுபட்டால் வாகனம் பறிமுதல், ஓட்டுநர் உரிமம் ரத்து, வழக்குப்பதிவு, அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்; பொது சொத்துக்கு சேதம் விளைவித்தால் கைது நடவடிக்கையும் பாயும் என போலீசார் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். இருந்தாலும் வார இறுதிகளில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பல சாலைகளில் இத்தகைய சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக சாஸ்திரி நகர் மற்றும் அடையாறு போலீசார் வழக்கு பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றத்தில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

சமூக ஆர்வலர்கள், போலீசாரின் கவனக்குறைவும் போதைப்பொருட்கள் புழக்கமும் இத்தகைய அட்டூழியங்கள் மீண்டும் தலைதூக்க காரணமாக இருக்கலாம் என குற்றம்சாட்டினர். இவ்வகை சாகசங்கள் விபத்து மற்றும் உயிரிழப்புக்கு வழிவகுக்கும் என்பதால், அரசு மற்றும் போலீசார் கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.