சென்னை: தமிழகத்தில் போதை கலாசாரத்தை முற்றிலும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசியல் கலக்கக் கூடாது என்றும், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும் என்றும் முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். தமது கட்சியினரானாலும் தயக்கம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், முதல்வர் விஜய் தலைமையில் கலெக்டர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் வனத்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்ற இரு நாள் மாநாடு தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய மாநாடு முதல் நாள் மதியம் வரை நடைபெற்றது.
சட்டம்-ஒழுங்கு தொடர்பாக அதிகாரிகள் சட்டத்தின் அடிப்படையில் சுதந்திரமாக முடிவு எடுக்கலாம் என்றும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாகவும் துரிதமாகவும் சட்டப்படி நடவடிக்கை எடுத்து தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றும் முதல்வர் வலியுறுத்தினார். அதே நேரத்தில் நிரபராதிகள் பாதிக்கப்படக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு மாதமும் கலெக்டர்கள் சட்டம்-ஒழுங்கு கூட்டங்களை நடத்தி, தொடர்புடைய துறைகளை ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும் எனவும், முக்கிய வழக்குகளில் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து குற்றவாளிகள் தப்பி விடாத வகையில் சட்ட நடவடிக்கைகளை வேகப்படுத்த வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.
பெண்கள் பாதுகாப்பை “100 சதவீதம்” உறுதி செய்ய வேண்டும்; இதில் எந்த சமரசமும் இருக்கக் கூடாது என முதல்வர் கூறினார். மேலும் மாணவர்கள், குழந்தைகள் பாதுகாப்பிலும் கவனம் செலுத்தி, பள்ளிகளுக்கு அருகிலுள்ள கடைகளை தொடர்ந்து கண்காணித்து தேவையெனில் சோதனை நடத்த வேண்டும் என்றும், போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபடுவோரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.





