பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் பெட்ரோல் பங்குகளில் டீசல் விற்பனைக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நாளை முதல் நீக்கப்படுவதாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அறிவித்துள்ளது.
மேற்காசிய நாடுகளில் கடந்த மார்ச்சில் ஏற்பட்ட போரின் பின்னணியில் பல நாடுகளில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தியாவிலும் விநியோக அழுத்தம் இருந்த நிலையில், பீதி காரணமாக சிலர் அதிக அளவில் எரிபொருள் வாங்கி பதுக்க முயன்றனர்.
இதனைத் தடுக்கும் வகையில், ஜூன் 12 அன்று பொதுத்துறை பெட்ரோல் பங்குகளில் ஒரு வாடிக்கையாளர் ஒரு வாகனத்திற்கு ஒரு நாளில் 200 லிட்டர் டீசலுக்கு மேல் வழங்கக் கூடாது உள்ளிட்ட வரம்புகளை அமைச்சகம் விதித்திருந்தது.
எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுப்பிய கடிதத்தில், நாட்டில் தற்போது நிலவும் பெட்ரோலியப் பொருட்களின் விநியோக நிலையை மத்திய அரசு ஆய்வு செய்ததாகவும், கட்டுப்பாடுகளை தொடர்ந்து அமல்படுத்துவது இனி பொது நலனுக்கு தேவையில்லை என்ற முடிவுக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில், இந்த வரம்புகள் நாளை முதல் திரும்பப் பெறப்படுகின்றன.





