புதுடில்லி: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா–அமெரிக்கா இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ஜெர்ஜியோ கோர் தெரிவித்தார்.
ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் பயன் தரும் வகையில் அமைக்கப்படுவதாக கூறிய அவர், அதன் பெரும்பகுதி முடிந்துவிட்டதாகவும், மீதமுள்ள பகுதிகளை இறுதி செய்ய பேச்சுவார்த்தையாளர்கள் முழு வீச்சில் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், இருதரப்பு கூட்டணியை வலுப்படுத்த அதிபர் டிரம்ப் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும், இந்தியாவை அவர் முக்கியமாகக் கருதுவதாகவும் கோர் கூறினார். அதிபர் டிரம்ப் மீண்டும் இந்தியா வருவதை எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஏஐ தொழில்நுட்பம், பாதுகாப்புத்துறை, விமானப் போக்குவரத்து உள்ளிட்ட பல துறைகளில் இணைந்து செயல்படுவதற்கு பெரிய வாய்ப்புகள் உள்ளதாக கூறிய தூதர், இரு தரப்பினரையும் ஒன்றிணைத்து ‘இருவருக்கும் வெற்றி’ தரும் சூழலை உருவாக்குவதே நோக்கம் என்றார்.
மேலும், அமெரிக்காவுக்கு இந்தியா தொடர்ந்து அதிக அளவில் பொருட்களை ஏற்றுமதி செய்து வருவதாகவும், இந்தியாவை நம்பகமான பங்காளியாகக் கருதி அமெரிக்க நிறுவனங்களின் நம்பிக்கை வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.





