புதுடில்லி: அனைத்து மாநிலங்களிலும் லோக்சபா எம்.பி. தொகுதிகளின் எண்ணிக்கையை 50 சதவீதம் உயர்த்தும் வகையில் பல்வேறு விதிமுறைகள் மற்றும் வழிமுறைகளை மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சிறப்புக் கூட்டத்தொடரில், 2029 முதல் லோக்சபா மற்றும் சட்டசபைகளில் மகளிருக்கு 33% இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் உள்ளிட்ட மூன்று மசோதாக்களை மத்திய அரசு கொண்டு வந்தது. அதில், லோக்சபா உறுப்பினர் எண்ணிக்கையை 543-இல் இருந்து 850-ஆக உயர்த்தும் முன்மொழிவும் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

இதனால் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையலாம் என திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி மசோதாக்களுக்கு எதிராக வாக்களித்தன. இதன் காரணமாக தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான மசோதாக்கள் நிறைவேறவில்லை.

இந்நிலையில், திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்பிக்கள் சிலர் மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்ததாகவும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவிலிருந்து 6 எம்பிக்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைந்ததாகவும் செய்திகள் வெளியாகின. இதன் பின்னணியில், மசோதாக்களை மீண்டும் கொண்டு வர மத்திய அரசு திட்டமிடுவதாக தகவல் பரவியது.

அதிகாரிகள் கூறுகையில், 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் மாநிலங்களுக்கு இடையிலான விகிதாசாரத்தை மாற்றாமல் தக்கவைக்கும் வழிமுறையும் பரிசீலனையில் இருப்பதாக தெரிவித்தனர். தற்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்னும் முடிவடையாததால், 2011 கணக்கெடுப்பு அடிப்படையில் லோக்சபா மற்றும் சட்டசபை தொகுதிகள் நிர்ணயிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை; தேவையான ஆதரவை உறுதி செய்த பிறகே மசோதாவை பார்லிமென்டில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.