புதுடில்லி: இந்திய செமிகண்டக்டர் மிஷன் 2.0க்கு ரூ.1.25 லட்சம் கோடி ஒதுக்கீட்டுக்கு மத்திய நிதியமைச்சகத்தின் செலவினங்களுக்கான குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முன்மொழிவு விரைவில் மத்திய அமைச்சரவையின் பரிசீலனைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு செமிகண்டக்டர் சூழல் அமைப்பை உருவாக்கி, செமிகண்டக்டர் விநியோக சங்கிலி முழுவதிலும் இந்தியாவின் திறன்களை உயர்த்துவதே இந்த இயக்கத்தின் நோக்கம் என மத்திய அரசு கூறியுள்ளது.

இதற்கு முன் ‘இந்திய செமிகண்டக்டர் மிஷன் 1’ திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.76 ஆயிரம் கோடி ஒதுக்கியிருந்தது. இதில் சிப் உற்பத்தி நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.65 ஆயிரம் கோடி, பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள செமிகண்டக்டர் ஆய்வகத்தை புதுப்பிக்க ரூ.10 ஆயிரம் கோடி, சிப் வடிவமைப்பு நிறுவனங்களுக்கு ஆதரவாக ரூ.1,000 கோடி என பிரிக்கப்பட்டிருந்தது.

தகவலின்படி, கடந்த வாரம் நடைபெற்ற கூட்டத்தில் 2.0 இயக்கத்திற்கான ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. சிப் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய முழுமையான செமிகண்டக்டர் திட்டத்தை வலுப்படுத்தும் நோக்கில் 2.0 இயக்கம் முன்னெடுக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.