தமிழகத்தில் இருந்து இயக்கப்பட்ட உள்நாடு மற்றும் வெளிநாடு விமான சேவைகளை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் முழுமையாக நிறுத்தியுள்ளது.
முன்னதாக சென்னை, மதுரை, கோவை விமான நிலையங்களில் இருந்து பல உள்நாட்டு நகரங்களுக்கு தினசரி சேவைகள் வழங்கப்பட்டன. மும்பை, டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு தினசரி விமானங்களும் இயக்கப்பட்டு வந்தன. பின்னர் மதுரை மற்றும் கோவையில் இருந்து சேவைகள் படிப்படியாக குறைக்கப்பட்டு, இறுதியில் முழுதாக நிறுத்தப்பட்டன.
சமீப காலத்தில் பெயரளவிற்கு சென்னையில் இருந்து கர்நாடக மாநிலம் ஷிவமொக்காவுக்கு மட்டும் தினசரி விமானம் இயக்கப்பட்டு வந்தது. அந்த சேவையும் தற்போது நிறுத்தப்பட்டதால், தமிழகத்தின் எந்த விமான நிலையத்திலிருந்தும் ஸ்பைஸ்ஜெட் விமானம் இயக்கப்படாத நிலை ஏற்பட்டுள்ளது.
மதுரையிலிருந்து துபாய்க்கு இயக்கப்பட்ட விமானம் நான்கு மாதங்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான போக்குவரத்து வல்லுநர்கள் கூறுகையில், தமிழகத்தில் ஸ்பைஸ்ஜெட் குறைந்த அளவிலேயே சேவைகளை வைத்திருந்தது; பயணிகள் ஆர்வம் இருந்தும் வழித்தடங்களை விரிவுபடுத்த நிறுவனம் முன்வரவில்லை என்றனர்.
மேலும், போர் பதற்றம் காரணமாக பிப்ரவரி 28 முதல் மதுரை–துபாய் நேரடி சேவை நிறுத்தப்பட்டதாகவும், தற்போது சூழ்நிலை சீரான நிலையில் பிற நிறுவனங்கள் விமானங்களை இயக்கினாலும் ஸ்பைஸ்ஜெட் மீண்டும் தொடங்க முன்வரவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.





