தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்ட விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற விழாவில் பதவியேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் பி. சிதம்பரம் மற்றும் அவரது மகன், எம்.பி. கார்த்தி சிதம்பரம் பங்கேற்கவில்லை. மாணிக்கம் தாகூர் நியமனத்தில் அதிருப்தி காரணமாகவே அவர்கள் வரவில்லை என கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இதற்கிடையில், மாநில தலைவர் பதவிக்கு கார்த்தி நியமிக்கப்படாததை கண்டித்து, கட்சியின் விவசாய அணியின் மாநில பொதுச்செயலர் ராஜன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
விழாவில் பேசிய மாணிக்கம் தாகூர், கட்சி வலிமை பெற அனைத்து தலைவர்களின் ஆதரவும் அவசியம் என்றும், ‘ஈகோ’வை விட்டு ஒருமித்த கருத்துடன் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் முதல்வர் விஜயை விட ராகுல் காந்திக்கு அதிக ஆதரவு இருப்பதாக கூறி, ராகுலை முன்னிறுத்தி காங்கிரஸை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.
எம்.எல்.ஏ., எம்.பி., கவுன்சிலர் போன்ற பதவிகளை பெற இனி பணம் தேவையில்லை; உழைப்பவர்களுக்கு பதவி கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார். ராகுல் பிரதமராகும் போது தமிழகத்தில் நீட் ரத்து, காவிரி நீர் பிரச்னைக்கு தீர்வு, மேகதாது அணை கட்ட தடை, மீனவர்களுக்கு நிரந்தர பாதுகாப்பு, தமிழகத்திற்கு நிதி பகிர்வு உள்ளிட்ட ஐந்து அம்ச திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றும் கூறினார். உள்ளாட்சி தேர்தலில் த.வெ.க. கூட்டணி தொடரும் என்றும் அவர் தெரிவித்தார். இதனிடையே, முன்னாள் மாநில தலைவர் அழகிரி, மாநில தலைவர் பதவியிலிருந்து மாற்றப்பட்டதால் செல்வப்பெருந்தகை தி.மு.க.வில் சேரமாட்டார் என செய்தியாளர்களிடம் கூறினார்.





