திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரத்தில், த.வெ.க. அரசு சட்டத்தை மதிக்கவில்லை என்று ஹிந்து முன்னணி குற்றம்சாட்டியுள்ளது.
திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற கிரிவலத்தில் பங்கேற்று பேசிய ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், இந்த வழக்கில் சுமார் 40 ஆண்டுகளாக தங்கள் அமைப்பு போராடி வருவதாக கூறினார். முன்னாள் மாநில தலைவர் ராஜகோபால் கொலை செய்யப்பட்டதாகவும், பூரண சந்திரன் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு மதுரை உயர்நீதிமன்ற கிளை தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக தீர்ப்பு வழங்கியதாகவும், அப்போது இருந்த தி.மு.க. அரசு அதை அமல்படுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இதனால் அதிகாரிகள் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்கும் நிலை ஏற்பட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
முதல்வர் விஜய் மதச்சார்பற்ற முறையில் செயல்படுவோம் என்று கூறியிருந்தாலும், தற்போதைய அரசு முன்பிருந்த நிலைப்பாட்டையே தொடர்வதாக அவர் விமர்சித்தார். மேலும், நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்ததாகவும், அரசு தயக்கம் சிறுபான்மையினர் ஓட்டு வங்கி காரணம் எனவும் கூறினார். அறநிலைத்துறையில் ஊழல் நடப்பதாகவும், அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என்பது போகப் போகத் தெரியும் என்றும் அவர் கூறினார்.





