சென்னை: அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 60,000 டயர்கள் கொள்முதல் செய்ய வெளியிடப்பட்ட டெண்டரை தமிழக அரசு திடீரென ரத்து செய்துள்ளது.
இதற்கு முன், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 500 புதிய பஸ்கள் மற்றும் மாநகர போக்குவரத்து கழகத்துக்கு 300 ஏசி மினி பஸ்கள் வாங்குவதற்கான டெண்டர்களும் ரத்து செய்யப்பட்டிருந்தன. அதன் தொடர்ச்சியாக டயர் கொள்முதல் டெண்டரும் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எட்டு அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் தினமும் 20,508 பஸ்கள் இயக்கப்படுகின்றன. டயர், கியர் பாக்ஸ் உள்ளிட்ட உதிரிபாகங்கள் பொதுவாக ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில், டயர் தேவையே மாதத்திற்கு சுமார் 8,000 வரை இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த தேவையை கருத்தில் கொண்டு, ஆறு மாதங்களுக்கு 60,000 டயர்கள் வாங்க கடந்த மார்ச் மாதத்தில் டெண்டர் வெளியிடப்பட்டது. போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், பஸ்கள் தடையின்றி இயக்க போதிய அளவில் டயர்கள் இருப்பில் உள்ளன என்றும், அடுத்த ஓரிரு மாதங்களில் புதிய டெண்டர் வெளியிட்டு மேலும் சிறப்பான விவரக்குறிப்புகளுடன் டயர்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.





