சென்னை: தமிழக பள்ளிக்கல்விக்கான புதிய பாடத்திட்டத்தை உருவாக்கும் பணிக்காக, முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் புதிய குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.

மத்திய அரசின் ‘தேசிய கல்விக் கொள்கை – 2020’க்கு மாற்றாக, தமிழக அரசு கடந்த ஆண்டு மாநில கல்விக் கொள்கையை வெளியிட்டது. அதன் அடிப்படையில் பள்ளி மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டங்களை வடிவமைக்க முன்பே இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுவை அரசு ரத்து செய்து, ‘மாநில பாடத்திட்டம் மற்றும் பாடநூல் உருவாக்கம்’ என்ற புதிய குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.

இந்தக் குழுவில் உறுப்பினர்களாக, இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (IISER) சார்ந்த விஞ்ஞானி வெங்கடேஷ்வரன், சென்னை பல்கலைக்கழக பதிவாளர் ரீட்டா ஜான் உள்ளிட்ட 14 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மாநில ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT) இயக்குநர் உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். பள்ளிக்கல்வித்துறை, தொடக்கக்கல்வித்துறை, தனியார் பள்ளிகள் இயக்ககம் மற்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் ஆகியவற்றின் இயக்குநர்களும் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.