பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஜூலை 1 அன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ரூ.14,115 கோடி மதிப்பிலான சாலை உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
உத்தரப் பிரதேசத்தில் கான்பூர்–கப்ராய் இடையே புதிய நெடுஞ்சாலைத் திட்டத்திற்கு ரூ.7,145 கோடி செலவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 4/6 வழிச்சாலையாக உருவாக்கப்படும் இந்த வழித்தடம் கான்பூர், கடம்பூர், ஹமீர்பூர், கப்ராய் உள்ளிட்ட பகுதிகளில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழித்தடம் லக்னோ, கான்பூர், கப்ராய், சாகர், போபால் வழியாகச் சென்று, மேலும் மும்பை நோக்கியும் இணையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் கான்பூரிலிருந்து தற்போது சுமார் 3.5 மணி நேரமாக உள்ள பயண நேரம் 1.5 மணி நேரமாகக் குறையும் என தெரிவிக்கப்பட்டது.
டில்லியில் ரூ.6,969 கோடி செலவில் புதிய 6 வழி சுரங்கப்பாதைத் திட்டத்துக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 8.1 கி.மீ நீளமுள்ள இந்த சுரங்கப்பாதை, துவாரகா அதிவேக நெடுஞ்சாலை மற்றும் வசந்த் குஞ்சில் உள்ள நெல்சன் மண்டேலா மார்க்கை இணைக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது.
இதுகுறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், எதிர்கால விரிவாக்கம் எளிதாக இருக்க ஆரம்பத்திலிருந்தே அகலமான (ஆறு வழி) உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற அணுகுமுறை பின்பற்றப்படுவதாக கூறினார். 2047-ம் ஆண்டுக்கான ‘வளர்ச்சியடைந்த இந்தியா’ இலக்கை மனதில் கொண்டு திட்டமிட வேண்டும் என பிரதமர் வழிகாட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.





